பொதுக்காலம் 12 ம் வாரம் | வெள்ளி| இறை சிந்தனை |25.06.2021

பொதுக்காலம் 12 ம் வாரம் | வெள்ளி| இறை சிந்தனை |25.06.2021

பொதுக்காலம் 12 ம் வாரம் | வெள்ளி| இறை சிந்தனை |25.06.2021

இன்றைய இறைச் சிந்தனை 
25/06/2021|வெள்ளி
தொ.நூ : 17 : 1, 9-10, 15-22
மத்தேயு : 8 : 1 - 4

எனது நோயை நீக்க உம்மால் முடியும்

கிறிஸ்துயேசுவில் பாசமிக்கவர்களே! 
இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் பனிரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமையைச் சிறப்பாகக் கொண்டாட அழைக்கப்பட்டிருக்கிறோம். இன்றைய நாளின் இறைச் சிந்தனைக்கு மையக்கருவாக அமைவது எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்பதாகும். கடவுளை இறுக்கமாகப் பிடிப்பவர்களை கடவுள் ஒருபோதும் கைவிடுவதில்லை. கடவுளைப் பிடிவாதமாகப் பிடிப்பவர்கள் கடவுளின் இரக்கத்தைப் பெறாமல் இருப்பதில்லை. நம்பிக்கையோடு கடவுளிடம் கேட்கின்றபோது கடவுள் அனைத்தையும் வாரி வழங்குகிறார். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இப்படிப்பட்டப் பிடிவாதத்தைத் தொழுநோயாளர் ஒருவரிடம் பார்க்கிறோம். அவர் ஆண்டவர் இயேசுவைப் பார்த்து எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்று மிகத் துணிச்சலாகக் கூறுகிறார்.

தொழுநோயாளர்கள் நிலை மிகமிக மோசமாகக் காணப்பட்டது. அவர்கள் பாவிகள், பாவம் செய்தவர்கள், கடவுளின் கோபத்தையும், சாபத்தையும் பெற்றவர்கள் என்கிறப் பார்வை இருந்தது. எனவேதான் தொழுநோயாளர்களைப் பற்றி பல இடங்களில் விவிலியத்தில் காணமுடிகிறது. பழைய ஏற்பாட்டில் பல தருணங்களில் இவர்கள் இடம்பெறுகிறார்கள். குறிப்பாக (வி.ப. 4: 6 -7), 
(எண் 12 :10), (2 அர 5:20),
(2 சாமு 3 : 29), 
(2 குறிப் 26 :19 - 21) ஆகிய ஐந்து இடங்களில் ஐந்து நபர்களுக்கு ஏற்பட்டத் தொழுநோய்ப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 
2 அரசர்கள் 5 : 1 - இல் நாமானின் தொழுநோய் பற்றியும் கூறப்பட்டுள்ளது. தொழுநோய் கடவுளின் தண்டனை என்றும் கூறுகிறது.

ஆனால் புதிய ஏற்பாட்டில் மத்தேயு 26 : 6 - 13, 
மாற்கு 14 : 3 - 9 ஆகியப் பகுதிகளில் இயேசுவும் மற்றவர்களும் சீமோன் இல்லத்தில் அமர்ந்திருந்தனர். சீமோன் தொழுநோயாளர் சீமோன் என்றே அறியப்படுகிறார். அவர் இயேசுவிடமிருந்துக் குணம் பெற்றவராக இருக்கலாம். அதேப் போன்று பத்துத் 
தொழுநோயாளர்கள் குணம் பெற்றதையும் பார்க்கிறோம்.
(லூக் 17 : 14). இன்றைய நற்செய்தி வாசகத்தில் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவைத் தனதுக் குணமளிக்கும் மருத்துவராக ஏற்றுக்கொண்டு, நம்பிக்கையோடு எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்றுச் சொல்லிக் குணம் பெறுகிறார்.

தொழுநோயாளர்களை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஊரின் கடை எல்லையில் ஒதிக்கிப் போடப்பட்டிருந்தார்கள். அவர்களின் நிழல் கூட மற்றவர்களின் மீது விழக்கூடாது. இந்தச் சூழலில் இயேசுவின் கடைக்கண் பார்வை இவர்கள் மீதுப்படுகிறது. அவர்களைத் தொட்டுத் தீண்டாமைப் பேயை தீக்கிரையாக்குகிறார். அவர்களுக்கு அந்தஸ்த்தையும், மதிப்பையும் கொடுக்கிறார். இனி வாழ்வே இல்லை; சாவுதான். எனவே இயேசுவிடம் சரணாகதி அடைவோம்! என்று அடைக்கலம் தேடி, முழுமையான நம்பிக்கையோடு வந்து முறையிட்ட தொழுநோயாளர் சொன்ன அதே வார்த்தையை நாமும் சொல்வோம்! எனது நோயை நீக்க உம்மால் முடியும் கடவுளிடமிருந்துக் குணத்தையும், நலத்தையும், நல்வாழ்வையும் பெறுவோம்!
பழைய ஏற்பாட்டில் நாமான் புறப்பட்டுச் சென்று யோர்தானில் மூழ்கியெழ நலம் அடைந்தார். புதிய ஏற்பாட்டில் குணம் பெற்றவர்கள் குருவிடம் காட்டிச் சான்றுப் பெற்றனர் 
(லூக்கா 17 : 14). சமூகத்தில்  மதிப்போடும், மாண்போடும் வாழ வழிவகுத்தார் இயேசு. நாமும் கொரோனா போன்ற பெருந்தொற்றுகளால் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களை புறக்கணிக்காமல், புறந்தள்ளாமல், உணர்வுகளைப் புரிந்து வாழ இன்றைய நாளில் வரம் வேண்டுவோம்!

அருட்பணி. எ.ஒய்சிலின் சேவியர், 
பங்குத்தந்தை, கொல்வேல்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0