இன்றைய இறைசிந்தனை - 26.06.2021 (சனி)
இறைவன் நம்மோடு நமது அன்றாட அனுபவத்தில் பேசுகிறாா்.
இன்றைய இறைச் சிந்தனை
26/06/2021|சனி
தொ.நூ : 18 : 1 - 15
மத்தேயு : 8 : 5 - 17
இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை
கிறிஸ்துயேசுவில் பாசமிக்க சகோதர சகோதரிகளே!
இன்று நாம் திருஅவையோடு இணைந்து ஆண்டின் பொதுக்காலம் பனிரண்டாம் வாரம் சனிக்கிழமையைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கிறோம். இன்றைய இறைச் சிந்தனையின் மையக்கருவாக நாம் எடுத்திடுப்பது இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என்பதாகும். நம்பிக்கையே வாழ்வு என்பதை அடிக்கடி உச்சரிக்கிறோம். கடுகளவு நம்பிக்கைக் கடலளவு மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது நம்பிக்கையோடு வாழும் மனிதர்கள் துன்பம் வந்தாலும் அசைவுறுவதில்லை, அச்சப்படுவதில்லை. தன்னம்பிக்கையையும், இறை நம்பிக்கையையும் வைத்துத் தன்னிகரற்ற நிலையை அடைந்து விடுகிறார்கள். அதிலும் சிலருடைய நம்பிக்கைப் பலச் சிறப்புகளையும், புகழையும் தேடிக் கொடுத்திருக்கிறது என்பது வரலாறு கூறும் உண்மை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் நூற்றுவர் தலைவரும் ஆண்டவர் இயேசுவிடம் உதவி வேண்டி வந்தார். அவர் கொண்டிருந்த நம்பிக்கைதான் இப்பகுதியில் மையக்கருவாக தரப்பட்டுள்ளது. நூற்றுவர் தலைவன் மிகுந்தச் செல்வமும், செல்வாக்கும் மிகுந்தவர். சொத்தும், பத்தும் அதிகமாகக் காணப்பட்டவர். புகழும், பெருமையும் அதிகமாகக் காணப்பட்ட அவர், மிகுந்த தாழ்ச்சியும், நம்பிக்கையையும் கொண்டிருந்தார். எனவேதான் இயேசுவிடம் உதவிக் கேட்டு வரும் போது தனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். தனது அதிகாரத்தையும், அந்தஸ்தையும் வைத்துச் சாதிக்க வேண்டுமென்று நினைக்கவில்லை. எனவேதான் இயேசுவிடம் உதவிக்காகச் சென்ற நூற்றுவர் தலைவரிடம் இயேசு நான் வந்து அவனைக் குணமாக்குவேன் (மத் 8:5-6) எனக் கூறுகிறார்.
இந்தப் பகுதியில்தான் தனதுத் தகுதியைத் தாழ்த்தித் தாழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ஐயா! நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என் பையன் நலம் அடைவான் (மத் 8: 7-8) எனக் கூறுகிறார். கிறிஸ்துயேசுவில் அன்பு மிக்கவர்களே! நூற்றுவர் தலைவரின் இந்த நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைதான் நாம் ஒவ்வொருத் திருப்பலிக் கொண்டாட்டத்திலும், நற்கருணையை வாங்குவதற்கு முன்னால் சொல்லித் தகுதியைப் பெற்றுக்கொள்கிறோம். நூற்றுவர் தலைவரின் இந்த வார்த்தைகள்தான் இயேசுவை புரட்டிப்போட்டது. எனவேதான் அவர் வியந்து இத்தகைய நம்பிக்கையை இஸ்ரயேலர் யாரிடமும் கண்டதில்லை எனக் கூறுகிறார்.
நமது வாழ்வில் நாம் இறைவனிடம் கொண்டிருக்கும் நம்பிக்கை எத்தகையது? என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம்! பல ஆண்டுகளாக ஏன் பிறப்பு முதல் இறப்பு வரை நாம் கொண்டிராத நம்பிக்கையை, எத்தனையோ மற்ற சமய மக்கள் ஆண்டவர் இயேசுவிடம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் ஆழமான நம்பிக்கையை ஆண்டவரிடம் வைத்து அற்புதங்களைப் பெற்றுச் செல்கிறார்கள் நாம் அரைகுறை நம்பிக்கையோடு வெறும் வெற்றுக் கிறிஸ்தவர்களாக வாழ்கிறோம்! இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு நம்பிக்கையோடு வாழ வரவேண்டும்!
அருட்பணி. எ.ஒய்சிலின் சேவியர்,
பங்குத்தந்தை, கொல்வேல்
What's Your Reaction?